கல்வாரியில் அந்த நாள்
Jeffersonville, Indiana, USA
60-0925
1சகோ. நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு மிக்க நன்றி. காலை வணக்கம் நண்பர்களே. மறுபடியுமாக இக்காலை வேளையில் கூடாரத்துக்கு வந்து, வார்த்தையை பிரசங்கிப்பதன் மூலமாகவும் வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதன் மூலமாகவும் தேவனுக்கு ஊழியம் செய்வது மிகுந்த சிலாக்கியமே. இந்த நாளுக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.
நான் உள்ளே நுழைந்தபோது பிரமித்துப் போனேன். ஒரு சகோதரன் என்னிடம் வந்து, “சுகம் பெற்ற நன்றி கெட்ட குஷ்டரோகி போல் நான் இருக்க விரும்பவில்லை'' என்றார். அது சகோ. ரைட் அவருக்காக நான் ஜெபித்தேன். கர்த்தர் அவருக்கு பரிபூரண சுகம் கொடுத்தார். அவர் அழுது கொண்டே வந்து என்னுடன் கைகுலுக்கி, கர்த்தர் அவருக்கு சுகத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி சொல்ல விரும்புவதாகக் கூறினார். அவர் திரும்ப வந்து நன்றி சொன்னார். எல்லாம் போய்விட்டது. அவர் இப்பொழுது பரிபூரணமாக குணமடைந்துவிட்டார். இந்த சாட்சிகளுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.
2ஆகவே சார்லி, நீங்களும் சகோதரன் ஜெப்ரீஸ், உங்களுக்கு விருப்பமென்றால் இங்கே வாருங்கள், இங்கே மேலே உள்ள இருக்கைகளில் அமருங்கள். நீங்கள் தாராளமாக வரலாம், அங்கே நீங்கள் நின்று கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அங்கேயுள்ள மற்றொரு சகோதரன், சகோ. உட், இங்கே மேலே வாருங்கள், இங்கே சில இடங்கள் இருக்கின்றன, நீங்கள் நிற்க வேண்டாம். இங்கே சில இடங்கள் உள்ளன என நினைக்கிறேன். இந்த இருக்கைகளில் உட்கார நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்.
நாங்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம். “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்” என்று ஒருமுறை சொல்லப்பட்டது என்று நினைக்கிறேன். கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவது கிறிஸ்தவனின் சிலாக்கியமும் மகிழ்ச்சியுமாம்.
3சுற்றிலும் பார்க்கும்போது, என் நண்பரில் அநேகரை இன்று காலை இங்கு காண்கிறேன், அதைக் குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஓஹையோவிலிருந்து வந்திருக்கும் சகோதரன் மற்றும் சகோதரி டெள அவர்களைக் காண்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அங்கே பின்புறத்தில் சகோதரன் சகோதரி ஆர்ம்ஸ்டராங்கைக் காண்கிறேன், ஓஹையோவிலிருந்து இவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளனர். உங்களெல்லாரையும் கூட தேவன் ஆசீர்வதிப்பாராக. ஆகவே, ஓ, சுற்றிலும் பார்க்கும்போது அநேகரைக் காண்கிறேன், எல்லா பெயர்களையும் கூறுவது சற்று சிரமமாக இருக்கும். சகோதரி ஹவர், கெண்டக்கியிலிருந்து வந்துள்ள உங்களை நாங்கள் காண்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். சார்லி மற்றும் நெல்லி, சகோதரன் ஜெப்ரீஸ் மற்றும் அவருடைய குடும்பம் மற்றும் நகரத்திற்கு அப்பாலிருந்து வந்துள்ள அநேகர். எனவே இன்று காலை ஒரு மகத்தான தருணத்தை நாம் எதிர் நோக்குகிறோம். தேவன் நம்மை சந்தித்து நமக்கு தேவையானவைகளை அருளிச் செய்வார் என்று நாம் எதிர்நோக்குபவர்களாய் இருக்கிறோம். நான் சுற்று முற்றும் பார்த்து, இங்குள்ள என் நண்பர் அனைவரையும் பெயர் சொல்லி அழைத்தால், அதற்காக காலை நேரத்தின் பெரும் பகுதியை நான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். சபைக்கு வந்து ஜனங்கள் அனைவரையும் கண்டு அவர்களைச் சந்திப்பது எனக்கு நல்லுணர்வைத் தருகிறது.
4அப்படியிருக்க, நாம் பரலோகத்தில் சந்தித்து அந்த மகத்தான நித்திய ஐக்கியத்தை தேவனுடைய சிங்காசனத்தை சுற்றிலும் ஒன்று கூடி அனுபவித்து, நாம் வாஞ்சையுடன் எதிர்நோக்கியிருந்த ஆசீர்வாதங்களைப் பெறும்போது எப்படியிருக்கும்! அங்கு நாம் அவருடைய சாயலில் அவருடைய ரூபத்தில் உண்டாக்கப்பட்டு, அவருடைய ஆவியை நம்மேல் பெற்றவர்களாய், எவ்வித சலிப்புமின்றி நித்திய காலமாய் அவரை ஆராதிப்போம்.
சற்று யோசித்துப் பாருங்கள், நீங்கள் எதை செய்ய விருப்பங் கொண்டாலும், அதை செய்யும்போது எப்பொழுதாவது சலிப்பு கொள்ளாத எந்த ஒரு வேலையும் இல்லை எனலாம். சார்லி, நீங்களும் நானும் எல்லாவற்றைக் காட்டிலும் அதிக விருப்பம் கொண்டு செய்து வருவது அணில் வேட்டையே. ஆனால் அதிலும் கூட சில நேரங்களில் சலிப்பு தோன்றிவிடுகிறது. எனக்கு மலைகள் ஏறுவதென்றால் பிரியம். ஆனால் சில நேரங்களில் எனக்கு சலிப்புண்டாகி வேறெதாகிலும் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. எனக்கு காரோட்டப் பிரியம்.
சில சமயங்களில் எனக்கு ஒரு வகையான சலிப்புண்டாகி, தளர்ச்சி அடையும்போது, நான் காரில் ஏறிக்கொண்டு “அவர்களில் ஒருவனாக இருப்பதாக என்னால் கூற முடிவதால், எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்னும் பாடலை அல்லது வேறு பாடலை பாடிக் கொண்டு காரின் 'ஸ்டீரிங் சக்கரத்தை' இறுகப் பிடித்துக் கொண்டு, காலை உதைத்து, உரக்க சத்தமிட்டு சாலையில் காரோட்டி செல்வது வழக்கம். ஆனால் சிறிது கழிந்து எனக்கு சலிப்புண்டாகி, நான் வீட்டுக்கு திரும்பி வேறொதாவதொன்றைச் செய்யத் தொடங்குவேன். ஆனால் அந்த புது ராஜ்யத்தில் தேவனை ஆராதிக்கும் போது, நமக்கு சலிப்பு தோன்றும் நேரமே இருக்காது. அது போகப் போக ஆசீர்வாதமாகவே இருக்கும். ஆனால் அப்பொழுது நாம் மறுரூபப்பட்டிருப்போம். இப்பொழுது உள்ளது போல் அப்பொழுது இருக்கமாட்டோம். நாம் இப்பொழுது உள்ளதைக் காட்டிலும் வித்தியாசமான சிருஷ்டிகளாயிருப்போம். எனவே நாம் மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம்.
5நான் யோசித்துக் கொண்டிருந்தேன். சகோ. சார்லீ, இதை ஏற்கனவே கூறியிருக்கிறேனா இல்லையாவென்று எனக்கு ஞாபகமில்லை. சில நாட்களுக்கு முன்பு நான் சார்லியுடன் கென்டக்கிக்கு சென்றிருந்தேன். அப்பொழுது அவர், “சகோ. பிரன்ஹாமே, நீங்களும் நானும் சேர்ந்து ஆயிரம் வருட அரசாட்சியில் அணில் வேட்டையாடுவோமா? உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார்.
நான், “சார்லி, நாம் வேட்டையாட மாட்டோம் என்று நினைக்கிறேன்'' என்றேன். (உரைக்கப்பட்ட வார்த்தை)
அவர், “நமக்கு அணில் வேட்டையென்றால் மிகவும் பிரியம். அப்படியிருக்க ஆயிரம் வருட அரசாட்சியில் வேட்டையாட மாட்டோமா என்ன?'' என்று கேட்டார்.
நான், “ஆயிரவருட அரசாட்சியின் போது எதுவுமே கொல்லப்படாது'' என்று விடையளித்தேன்.
அவர், ''நமக்கு அது மிகவும் பிரியம் அல்லவா?'' என்றார்.
நான், ''சார்லி, ஒரு காலத்தில் நீங்கள் பன்றியாயிருந்து, அதன் பிறகு மனிதன் என்னும் உயர் வர்க்கத்துக்கு மாற்றப்பட்டீர்கள் என்று உங்களை நம்பச் செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் மீண்டும் பன்றி வர்க்கத்துக்கு திரும்பச் சென்று பன்றி அனுபவிக்கும் இன்பங்களை அனுபவிக்க பிரியப்படுவீர்களா?“ என்று கேட்டேன்.
அவர், ''மாட்டேன்'' என்றார்.
நான், ''பாருங்கள், நீங்கள் மனிதன் என்னும் உயர்வர்க்கத்தில் உள்ள போது, பன்றியாக மீண்டும் மாற விரும்பமாட்டீர்கள். அதை பத்தாயிரம் மடங்கு பெருக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் மறுரூபப்பட்டு இங்கிருந்து அங்கு செல்லும்போது, அவ்வளவு உயர்வான நிலையை அடைந்திருப்பீர்கள். நீங்கள் மறுபடியும் மனிதனாக ஆக விருப்பம் கொள்ளமாட்டீர்கள்'' என்றேன். அது உண்மை. அது வித்தியாசமான ஒன்றாக இருக்கும். ஒரு நாள் நாம் உயர்ந்த நிலைக்கு ஏறிச்செல்வோம் என்னும் எண்ணமே என்னை மகிழ்வுறச் செய்கிறது.
6நல்லது, கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த ஞாயிறு... அதன் பிறகு கிறிஸ்தவ வர்த்தகக் குழுவைச் சேர்ந்த என் நல்ல நண்பர் சகோ. மைனர் ஆர்கன்பின்ரைட் என்பவருடனும், சகோ. க்ளேய்டன் சோன்மோர் என்பவருடனும் வயோமிங்குக்கு, இல்லை, இடாஹோவுக்கு செல்லப்போகிறேன்.
அதற்கும் அடுத்த வாரம் - அதாவது ஏழாம் தேதியன்று - நான் டல்லாஸிலுள்ள டெக்ஸாஸில் நடக்கும் சுகமளிக்கும் சத்தம் கன்வென்ஷனில் கலந்து கொள்வேன். நான் ஏழாம் தேதி இரவு பேசுவேன். அதன் பிறகு நான் சகோ. ஆர்கன் பிரைட்டுடன் இடஹோவுக்கு சென்று கிறிஸ்தவ வர்த்தகக் குழுவில் கலந்துக் கொண்டு, வீடு திரும்புவதற்கு முன்பு ஒருக்கால் ஒரு இரவு மின்னியா போலீஸில் கழிப்பேன். அதன் பிறகு கிறிஸ்தவ வர்த்தகரின் காலை உணவு கூட்டம்.
கர்த்தருக்கு சித்தமானால் - அது அனுமதிக்கப்பட்டு கர்த்தருக்கு சித்தமானால் - அடுத்த ஞாயிறு காலை இக்கூடாரத்துக்கு வந்து “காற்றில் சுழல் காற்று” என்னும் பொருளின் மேல் பேசலாமென்றிருக்கிறேன். அது கர்த்தருக்கு சித்தமானால்.
7இது என் இருதயத்தில் வாரம் முழுவதும் இருந்து வருகிறது.
அன்றொரு நாள் விடியற்காலை சுமார் 4 மணிக்கு நான் உறக்கத்தினின்று எழுந்த போது, கல்வாரியில் அந்த நாள் என்னும் கருத்தைப் பெற்றேன். இன்று காலை கல்வாரியில் அந்த நாள் என்னும் பொருளின் மேல் பேச விரும்புகிறேன்.
வேத வாசிப்பிற்கென, நாம் வேதாகமத்தை பரி. மத்தேயு எழுதின சுவிசேஷம் 27-ம் அதிகாரத்துக்கு திருப்பி, நமது பின்புறக் காட்சியை பெற 27-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். அதன் பிறகு நாம் உடனே பிரசங்கத்தைத் தொடங்கி, பிரசங்க ஆராதனை முடிந்தவுடனே வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம்.
8நான் சென்ற முறை இங்கு வந்து போன பிறகு- என் புது விதமான ஊழியத்தை மாதிரிப்படுத்தி காண்பிக்க இதை கூறுகிறேன் - நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த கூட்டத்தில் நடந்தவை, எழுதப்பட்ட சாட்சிகளாக எனக்கு வந்து சேர்ந்தன. எவ்வளவு இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்கள் காண்பிக்கப்பட்டாலும், அந்த நபருடன் நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி செய்வதில் ஏதோ ஒன்றுள்ளது. பாருங்கள், சுகம் பெறுதல் என்பது தனிப்பட்ட நபரின் விசுவாசத்தைப் பொறுத்தது.
தனிப்பட்ட நபருக்கு விசுவாசம் இருக்கவேண்டியது அவசியம். பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தினரின் மேல் சென்று நடந்த சில காரியங்களை “உன் பெயர் இன்னின்னது, ''நீ இன்னின்ன இடத்திலிருந்து வருகிறாய். ''நீ இன்னின்ன காரியத்தை செய்தாய்,'' என்பதை எடுத்துக் கூறி, ''அது இப்படி நடக்கும்'' என்று சொல்லி, அதே விதமாக நடப்பதை உரைக்கப்பட்ட வார்த்தை காண நேரிட்டாலும், அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் தனிப்பட்ட நபர்,''அது தேவனாயிருக்க வேண்டும். என் சுகத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூற வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக தனிப் பட்ட நபர், ”நான் சுகம் பெற என் மேல் கைகளை வைத்து ஜெபியுங்கள்'' என்கிறார்.
9அப்படி விசுவாசிக்கவே நாம்அமெரிக்காவில் கற்பிக்கப்பட்டுள்ளோம். அது வேத பூர்வமானது என்பது உறுதி. ஆனால் ஆப்பிரிக்காவிலும் மற்றவிடங்களிலும் இயற்கைக்கு மேம்பட்ட காரியங்கள் நடக்குமானால், கூட்டத்திலுள்ள அனைவருமே ஒரே நேரத்தில் அதை விசுவாசித்து சுகத்தை பெற்றுக் கொள்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு எதுவுமே கற்பிக்கப்படவில்லை. சுகம் பெறுதலைக் குறித்தும் கூட அவர்களுக்கு கற்பித்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் அதை காணும்போது, ஜீவிக்கிற தேவன் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வத்துக்கும் மேலானவர் என்றும். அவர் சுகமளிக்கிறவர் என்றும் விசுவாசிக்கின்றனர். அவ்வளவு தான். ஏனெனில் அவர் சுகமளிக்கிறவர், அவர் ஜனங்களை சுகப்படுத்துகிறார் என்னும் அஸ்திபாரம் ஏற்கனவே போடப்பட்டுவிட்டது. அவர்கள் அவருடைய சமுகம் அவருடைய சபையின் மூலம் கிரியை செய்வதைக் காணும்போது, ''அது அதை முடிவுபடுத்துகிறது. அது தான் எங்களுக்கு தேவை'' என்று சொல்லி அதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் நமக்கோ வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்குதல் போன்றவை கற்பிக்கப்பட்டுள்ளன. ஆகையால் தான் அது அமெரிக்காவில் அவ்வளவு நன்றாக கிரியை செய்வதில்லை.
இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், அடுத்த ஞாயிறு காலை, கர்த்தருக்கு சித்தமானால் (சகோ. நெவில் அதை நிச்சயம் அறிவிப்பார் ) காற்றில் சுழல்காற்று.
10நீங்கள் வேதாகமத்தை மத்தேயு 27-க்கு திருப்ப உங்களுக்கு சிறிது நேரம் அளித்துவிட்டேன். இப்பொழுது பரிசுத்த மத்தேயுவினுடைய சுவிசேஷம் 27-ம் வசனத்திலிருந்து படிக்கத் தொடங்குவோம். படிக்கும்போது கூர்ந்து கவனியுங்கள்.
@அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையில் கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச் செய்து,
@அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,
@முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி,
@அவர் மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.
@அவரைப் பரியாசம் பண்ணின பின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டு போனார்கள்.
@போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.
@கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது,
@கசப்புக் கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள், அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
@அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் சீட்டுப் போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறை வேறும்படி இப்படி நடந்தது.
@அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.
@அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
@அப்பொழுது அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடே கூடச் சிலுவையில் அறையப்பட்டார்கள்.
@அந்த வழியாய் நடந்து போகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:
@தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள், நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.
@அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம் பண்ணி:
@மற்றவர்களை ரட்சித்தான், தன்னைத் தான் ரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை, இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
@தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.
அவரோடே கூடச் சிலுவையில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
@ஆறாம் மணி நேர முதல் ஒன்பதாம் மணிநேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
@ஒன்பாதம் மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூட்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
@அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது; இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
@உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்தான்.
@மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
@இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியைவிட்டார்.
@அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
@கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
@அவர் உயிர்த்தெழுந்த பின்பு, இவர்கள் கல்லறைகளை விட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
@நூற்றுக்கு அதிபதியும், அவனோடே கூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும், சம்பவித்த காரியங்களையும் கண்டு மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
மத். 27: 27-54.
11ஜெபத்துக்காக சிறிது நேரம் தலைவணங்குவோம்: கர்த்தாவே, நீர் தேவன் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த புனிதமான, பரிசுத்தமான வார்த்தையைப் படித்த பிறகு, உமது சுபாவம் இன்னும் மாறவில்லை என்று நாங்கள் காண்கிறோம். நீர் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். இயேசுவுக்கு எந்த உதவியும் இல்லை என்றும், அவர் பொல்லாங்கரின் கைகளினால் கொண்டு செல்லப்பட்டு, நொறுக்கப்பட்டு, துப்பப்பட்டு, பரியாசம் பண்ணப்பட்டு, இரத்தம் வடிய சிலுவையில் தொங்கி மரித்தாரென்றும், அவருக்கு எப்பக்கத்திலிருந்தும் உதவி வராமல், அதன் காரணமாக, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்'' என்று அவர் உரக்க சத்தமிட்டார் என்பது போலவும் தோன்றினது. ஆனால் அந்த நேரத்தில் நீர் அவ்வாறு நடந்து கொண்டீர். வேறுயாரும் அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியாது.
கர்த்தாவே, எங்களால் கடக்க முடியாத நதிகள், ஏற முடியாத மலைகள் இருக்குமானால், மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை நீர் செய்வதில் விசேஷத்தவர் என்று எங்களுக்கு கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வேலைகளில் நீர் நிபுணர். அந்த நாளில் கல்வாரியில் நடந்ததன் காரணம் உமக்குத் தெரியும். நீர் தேவனாக, முடிவற்றவராக இருப்பதனால், அந்த நேரம் வரவேண்டும் என்பதை நீர் அறிந்திருந்தீர். அது நிறைவேறின போது, நீர் தேவன் என்பதைக் காண்பித்தீர். யார் முதலாளி என்பதைக் காண்பித்தீர்.
12நீர் பூமியை அசைத்தீர், அப்பொழுது நிலத்துக்குள் நித்திரையடைந்திருந்த பரிசுத்தவான்கள் எழுந்து வெளியே வந்தனர். நீர் சூரியனை பகலில் இரவின் இருள் போல் இருளடையப் பண்ணி, நீர் தேவன் என்பதை நிரூபித்தீர். ஆனால் இவ்வளவு காலமாக நீர் அமைதியாயிருந்து வருகிறீர் என்பது போல் தோன்றுகிறது. இதிலிருந்து நாங்கள் அடையும் தீர்மானம் என்னவெனில், நாங்கள் ஆவியில் நடந்து, தேவனுடைய கரத்தினால் வழிநடத்தப்பட்டு, ஏதாவதொன்று தவறென்று தோன்றின போதிலும், தவறாக எது காணப்பட்டாலும் சரி,இன்னுமாக நாங்கள் கால்வாரியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், தேவன் சரியான காலத்தில் சரியான மணி நேரத்தில் பேசுவார் என்பதே.
இப்பொழுதும் பிதாவாகிய தேவனே, எங்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உம்முடைய ஆவி எங்களை வழிநடத்த வேண்டிக் கொள்கிறோம். புறா ஆட்டுக்குட்டியை வழிநடத்தினது போல் எங்களை வழிநடத்துவீராக. எங்களுக்கு என்ன நேர்ந்தாலும், நாங்கள் கீழ்ப்படிந்தவர்களாய், தேவன் சகலத்தையும் நன்மைக்காகவே செய்கிறார் என்றும், எல்லாம் சரியாகிவிடுமென்றும் நாங்கள் அறிந்து கொள்ள அருள்புரிவீராக.
இந்த ஆராதனையில் எங்களோடு இரும். இரட்சிக்கப்படும் நிலையில் இருந்து இரட்சிப்பை நாடிக் கொண்டிருப்பவர்களை இரட்சிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறாம். நித்திய ஜீவனை நாடிக் கொண்டிருப்பவர்களை நிரப்புவீராக. வியாதியஸ்தரையும் ஊனமுற்றோரையும் சுகமாக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். அதற்காக உம்மை நாங்கள் துதிக்கிறோம். இதை உமது குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
13இன்று காலையில் நான் பேசுவதற்காக தெரிந்து கொண்ட கல்வாரியில் அந்த நாள் என்னும் பொருளுக்கு உங்கள் கவனத்தைக் கவர விரும்புகின்றேன். இது இக்காலத்துக்கு ஏற்ற ஒரு பொருள் அல்ல. இது பெரிய வெள்ளிக்கிழமை அன்று அளிக்கப்பட வேண்டிய ஒரு செய்தி. ஆனால் கல்வாரி நாள்தோறும் நினைவு கூரப்பட வேண்டும். அதைக் குறித்து நாம் அதிகம் கேட்டிருக்கிறோம், அதிகம் படித்திருக்கிறோம். காலத் தொடக்க முதற்கொண்டே பிரசங்கிமார்கள் அதைக் குறித்து பிரசங்கித்து வந்துள்ளனர். காலங்கள் தோறும் பாடகர்கள் அதன் மேல் பாடல்கள் பாடியுள்ளனர். அது நடப்பதற்கு நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பே தீர்க்கதரிசிகள் அதை முன்னுரைத்தனர். இக்காலத்து தீர்க்கதரிசிகள் அது எப்பொழுது நடந்ததென்று பின் நோக்கி சுட்டிக் காண்பிக்கின்றனர். அது அவ்வளவு முக்கியமான நாள்.
இப்பூமியில் தேவன் தோன்றப் பண்ணின நாட்கள் அனைத்திலும் இது மிகவும் முக்கியமான ஒரு நாள். கல்வாரி மனு குலத்துக்கு மிகவும் முக்கியமானது. அதற்கு சென்று, அது நமக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்று ஆராய்தல் நமக்கு நன்மை பயக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தாமதமான நேரத்தில், நாம் அறிந்துள்ள தேவனுடைய முக்கியமான காரியங்கள் ஒவ்வொன்றையும் நாம் நாடி, நம்மால் அறிந்து கொள்ள முடியும் அனைத்தையும் நாம் கற்றுக் கொள்ளவே இங்கு வந்திருக்கிறோம் என்பது உறுதி. அது நமக்கு அவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்றும், தேவன் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்றும், நமக்கு என்ன செய்வதாக அவர் வாக்களித்துள்ளார் என்றும் அறிந்து கொள்ளவே நாம் சபைக்கு வருகிறோம்.
14ஆகையால் தான் போதகர் பிரசங்கம் செய்கிறார். ஆகையால் தான் அவர் வேத வசனங்களை ஆராய்ந்து, தியானித்து, பரிசுத்த ஆவியின் ஏவுதலுக்காக காத்திருக்கிறார். ஏனெனில் அவர் தேவனுடைய மக்களுக்கு பொது ஜன ஊழியன். தேவன் தமது ஜனங்களுக்கு உதவியாயிருக்க அவர்களுக்கு என்ன கூற விரும்புகிறார் என்று அவர் அறிந்து கொள்ள முயல்கிறார். ஒருக்கால் அது அவர்கள் பாவங்களைக் கண்டித்துணர்த்தும் ஒன்றாக இருக்கக் கூடும். ஆனால் அது, அவர்கள் தங்கள் பாவங்களை விட்டோய்ந்து கர்த்தரைச் சேவிப்பதற்கென அவர்களைத் தூக்கியெடுக்க உதவியாயிருக்கும். போதகர்கள் இப்படிப்பட்ட காரியங்களை தேவனுடைய சமுகத்தில் நாட வேண்டியவர்களாயுள்ளனர்.
15அந்த நாள் மிகவும் முக்கியமான நாட்களில் ஒன்றாக அமைந்திருக்குமானால், அது நமக்கு எவ்வாறு முக்கியம் வாய்ந்தது என்று மூன்று காரியங்களைக் கொண்டு பார்ப்போம். நூற்றுக்கணக்கான காரியங்களை நாம் எடுத்து பேசலாம். ஆனால் இக்காலை வேளையில் நான் மூன்று வெவ்வேறு மிக முக்கியமான காரியங்களை தெரிந்து கொண்டுள்ளேன். கல்வாரி நமக்கு எப்படிமுக்கியம் என்பதை நாம் அடுத்த சில நிமிடங்களில் பார்க்கலாம். அது இங்குள்ள ஒவ்வொரு பாவியையும் கண்டித்துணர்த்தி, ஒவ்வொரு பரிசுத்த வானையும் முழங்கால்படியிடச் செய்து, வியாதிப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு நபரும் தன்னுடைய விசுவாசத்தை தேவனிடமாக உயர்த்தி சுகமடைந்தவர்களாக நடந்து செல்லவும், ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்படவும், பின் வாங்கிப்போன ஒவ்வொருவரும் திரும்பி வந்து தன்னைக் குறித்து வெட்கமடையவும், ஒவ்வொரு பரிசுத்தவானும் களி கூர்ந்து மேலும் மேலும் புது நம்பிக்கையை பெறவும் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.
16நமக்கும் உலகத்துக்கும் கல்வாரி செய்த ஒரு முக்கியமான காரியம் என்னவெனில், அது பாவத்தைக் குறித்த பிரச்சினையை ஒரேயடியாக தீர்த்துவிட்டது. மனிதன் பாவம் செய்த குற்றத்துக்கு ஆளானான். பாவத்துக்கான தண்டனையை யாருமே செலுத்தி தீர்க்க முடியாது. அது மிகவும் பெரிய தண்டனையாயிருந்த படியால், யாருமே அதை செலுத்த முடியவில்லை. அது அந்த விதமாக இருக்க வேண்டுமென்று தேவன் நியமித்திருந்தார் என்று நான் உண்மையாகவே நம்புகிறேன் - அதாவது மனிதன் செலுத்த முடியாத அளவுக்கு தண்டனை அவ்வளவு பெரிதாயிருக்க வேண்டுமென்றும், தேவனே அதை செலுத்தி தீர்க்கவேண்டுமென்றும்.
பாவத்துக்கான தண்டனை மரணம். நாம் எல்லோருமே பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் இவ்வுலகத்துக்கு வந்தோம். எனவே நம்மில் யாருமே அதற்கு பாத்திரவான் அல்ல. பூமியில் அதற்கு பாத்திரவானான ஒருவனையுமே கண்டுபிடிக்க முடியாது.
17பாவம் பூமியில் தொடங்கவில்லை. அது பரலோகத்தில் தொடங்கினது. பிசாசாகிய லூசிபர் பூமியில் விழுவதற்கு முன்பு கீழ்ப்படியாமையின் காரணமாக ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டான்... பாவம் பரலோகத்தில் தொடங்கினது. அங்கு தேவன் தேவ தூதர்களை, அவர் மானிடரை வைத்த அதே அடிப்படையில் வைத்திருந்தார். அறிவு... அறிவு விருட்சம். ஜீவ விருட்சம், அறிவு விருட்சம். இவ்விரண்டில் ஒன்றை மனிதன் தெரிந்து கொள்ளவேண்டியிருந்தது. அவ்வாறே லூசிபரும் தெரிந்து கொள்ள அவனுக்கு முக்கியமான ஸ்தானம் அளிக்கப்பட்டபோது, அவனுக்கு தேவனை விட மேலான ஒரு நிலையை விரும்பினான். அதுதான் தொல்லை தொடங்கக் காரணமாயிருந்தது.
18பாவத்துக்கு ஒரு தண்டனை தேவை. அதுதான் மரணம். மரணம்தான். அதற்கு தண்டனை. அது... இதை நாம் அதிகமாக விவரித்துக் கொண்டே செல்லலாம். ஏனெனில் ஒரு மரணம் மாத்திரமுண்டு என்று நான் விசுவாசிப்பதில்லை. ஒரு ஜீவன் மாத்திரமுண்டு. நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்ட மனிதன் மரிப்பதில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். பாவம் செய்த ஆத்துமாவுக்கு முழு அழிவுண்டு என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் “பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்'' என்று வேதம் கூறுகிறது - மனிதன் அல்ல, பாவஞ் செய்கிற ஆத்துமா. எனவே சாத்தான் நிச்சயமாக மரித்து முழுவதும் அழிக்கப்பட வேண்டும். சாத்தான் இரட்சிக்கப்படுவான் என்னும் 'யூனிவர்ஸலிஸ்ட்' வகுப்பினரின் கருத்தை நான் ஆமோதிப்பதில்லை. சாத்தான் பாவம் செய்தான். அவனே பாவத்தை தோன்றச் செய்தவன். அவன் ஆத்துமா பாவம் செய்தது. அவன் ஒரு ஆவி. அந்த ஆவி முழுவதுமாக அழிக்கப்பட்டு, அதில் ஒன்றுமே விட்டுவைக்கப்படாது.
19ஆதியிலே பாவம் கறுப்பு போர்வை போல் பூமியின் மேல் விழுந்தபோது, அது பூமியை முடக்கிப்போட்டது. அது பூமியிலிருந்த ஒவ்வொரு சிருஷ்டியையும், தேவனுடைய சிருஷ்டிப்பு அனைத்தையும் அடிமைத் தனத்துக்கு கொண்டு வந்துவிட்டது. மனிதன் மரணத்துக்கும், வியாதிக்கும், தொல்லைகளுக்கும், துயரத்துக்கும் அடிமையானான். இயற்கை அனைத்தும் அதனுடன் விழுந்துபோனது. பாவம் என்பது பூமியை முடக்கின மயக்கம் கொடுக்கும் மருந்தாக அமைந்தது. நாம் இங்கு நம்பிக்கையற்றவர்களானோம். ஏனெனில் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் அதற்கு கீழ்ப்பட்டனர். எனவே அதற்கு பரிகாரம் பாவமில்லாத ஓரிடத்திலிருந்து வரவேண்டியதாயிருந்தது. அது பூமியிலிருந்து வரவே முடியாது.
நம்மில் ஒருவர் மற்றவர்களை மீட்கமுடியாது. அது வேறொருவராக இருக்க வேண்டும். மனிதன் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டதை உணர்ந்த போது, அவன் அலைந்து திரிகிறவனானான். அவர்கள் கதறியழுது, உழைத்து, மலைகளின் வழியாகவும், வனாந்தரத்தின் வழியாகவும் தேவன் தாமே கட்டி உண்டாக்கின நகரத்தை தேடி அலைந்து சென்றனர். அவன் எப்பொழுதாவது மறுபடியும் தேவனுடைய சமுகத்தில் வரும் போது, இதைக் குறித்து அவரிடம் பேசலாமென்று அவன் அறிந்திருந்தான். ஆனால் அவருடைய சமுகத்தில் வர அவனுக்கு வழி இருக்கவில்லை. அவன் இழக்கப்பட்டான். எந்தப் பக்கம் போவது என்று அவனுக்கு தெரியவில்லை. எனவே அவன் அலைந்து திரிந்து, அந்த இடத்தை அடைய வழியைக் கண்டு பிடிக்கமுயன்றான். அவனுக்குள் இருந்த ஏதோ ஒன்று, அவன் பரிபூரணமான இடத்திலிருந்து வந்தவன் என்று அவனிடம் கூறினது.
20அந்த பரிபூரணத்தை தேடாதவர் இன்று காலை இங்கு வந்திருப்பவர் மத்தியிலோ, அல்லது உலகம் முழுவதிலும் இந்த ஒலிநாடாவைக் கேட்பவர் மத்தியிலோ - இங்கோ அல்லது வேறிடத்திலோ - இல்லவே இல்லை எனலாம். உங்கள் கடன்களை செலுத்தி தீர்த்த பின்பு, அத்துடன்முடிவு பெற்றுவிட்டதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். அப்பொழுது குடும்பத்தில் யாராவது வியாதிப்படுகின்றனர். வியாதி சுகமாகும் போது, அதற்கான கடனை நீங்கள் செலுத்த வேண்டிவர்களாயிருக்கிறீர்கள். உங்கள் தலைமயிர் நரைக்கும்போது, நீங்கள் மறுபடியும் இளைஞராக விரும்புகிறீர்கள். பாவத்தின் காரணமாக ஏதாவதொன்று எப்பொழுதும் இருந்து வருகிறது. ஆனால் நீங்கள் அதை தேடிக்கொண்டிருப்பதனால், ஏதோ ஓரிடத்தில் பரிபூரணம் உள்ளதென்று உங்கள் இருதயத்தில் அறிந்திருக்கிறீர்கள். ஏதோ ஒன்று எங்கோ உள்ளது.
21அதன் காரணமாகத் தான் பாவி இன்று அநேக சமயங்களில் அதை தேடி அலைகிறான். ஒரு அழகான இளம் பெண், தான் பிரபலமாவதற்கு தன் தலைமயிர் சுருள்களை கத்தரித்துக் கொள்ளலாம். தன்னை அழகுபடுத்திக்கொள்ள முகத்தில் வர்ணம் தீட்டிக் கொள்ளலாம், தன் உடலமைப்பை நன்றாகக் காண்பிக்கும் உடைகளை உடுத்திக்கொள்ளலாம். ஏனெனில் அது ஒன்று மாத்திரமே. மற்றவர்களை அவளிடம் கவர்கின்றது. அது மனிதன் அவளைக் கண்டு விசில் அடித்து, கையை ஆட்டி , அவளுடன் சல்லாபம் செய்யத் தூண்டுகிறது. அவ்வாறே இளைஞர்களும் பெண்களுக்குச் செய்கின்றனர். பெண்களுக்கு கவர்ச்சியாயிருக்க அவர்கள் முனைகின்றனர். பக்கத்து வீட்டுகாரர் அடுத்த வீட்டுக்காரரின் வீட்டைக் காட்டிலும் தன் வீடு சிறப்பாக அமைய வேண்டுமென்று கருதி, அதை அவ்வாறு கட்ட பிரயாசப்படுகின்றார். அது எப்பொழுதுமே அவ்வாறு இருந்து வருகிறது. நாம் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோம், அது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது.
22ஒரு வாலிபப் பெண் தன்னைக் காட்டிலும் பிரபலமாயிருக்கக் காண்கிறாள். அண்டை வீட்டார் தன் வீட்டைக் காட்டிலும் அழகான ஒன்றைக் காண்கிறார். ஒரு ஸ்திரீ தன்னைக் காட்டிலும் அழகான விதத்தில் உடுத்துள்ள மற்றொரு ஸ்திரீயைக் காண்கிறாள். அது வேறொன்றை தேடிக் கொண்டிருக்கும் நமக்குள் இருக்கும் ஒன்று. நாம் இழக்கப்பட்ட நிலையில் உள்ளதை அது காண்பிக்கிறது. நமக்கு திருப்தி அளிக்கக் கூடிய ஒன்றை, நமக்குள் இருக்கும் பசியைத் தீர்க்கும் ஒன்றைக் கண்டுபிடிக்க விழைகிறோம். ஆனால் அதை நாம் கண்டுபிடிக்க முடியாதது போல் தோன்றுகிறது.
மானிடர் காலங்கள் தோறும் முயன்று வந்துள்ளனர். அதைப் பெறவேண்டுமென்று அவர்கள் அழுதனர். அவர்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் செய்தனர். அவர்கள் உலகம் முழுவதும் அலைந்தபோதிலும், அவர்களால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
23முடிவில் ஒரு நாள் - அது தான் கல்வாரியில் நிகழ்ந்த அந்த நாள்- இயேசு கிறிஸ்து என்னும் பெயருடைய ஒருவர், தேவனுடைய குமாரன், மகிமையை விட்டு இறங்கிவந்தார். அப்பொழுது கல்வாரி உருவானது. அந்த நாளில் கிரயம் செலுத்தப்பட்டது. பாவப் பிரச்சனை சதாகாலங்களுக்கும் தீர்க்கப்பட்டு, நமது பசிதாகத்தை தீர்த்து வைக்க அது வழியைத் திறந்து கொடுத்தது. அது திருப்தியளிக்கும் இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்தது.
கல்வாரிக்கு விஜயம் செய்த எந்த மனிதனும் அங்கு நடந்ததைக் கண்டபிறகு, முன்பிருந்த நிலையில் இருக்கவே முடியாது. அந்த இடத்தை அவன் அடையும்போது, அவன் அத்தனை காலமாக வாஞ்சித்திருந்த அனைத்தும் அங்கு நிறைவு பெறுகிறது. அது அவ்வளவு முக்கியமான நாள், அது அவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி. அது உலகத்தையே அசைத்தது. அது முன்பு எப்பொழுதுமே அசைக்காத விதத்தில் உலகத்தை அசைத்தது.
இயேசு கல்வாரியில் மரித்து, பாவத்துக்கு கிரயத்தை செலுத்தி அந்த பிரச்சினையை தீர்த்தபோது,
24இந்த பாவமான உலகம் இருளடைந்தது. சூரியன் நடுப் பகலில் மறைந்தது. பூமி பயத்தினால் அதிர்ந்தது. கன்மலைகள் குலுங்கின. கன்மலைகள் பிளந்தன. மரித்த சடலங்கள் உயிர்பெற்று கல்லறையை தள்ளிக் கொண்டு வெளி வந்தன. அது என்ன செய்தது? தேவன் கல்வாரியில் சரியாக இலக்கு வைத்து சுட்டார். அவர் சாத்தான் என்னும் மிருகத்தை சதாகாலங்களுக்கும் காயப்படுத்தினார்.
அன்று முதல் அவன் அதிக கேடுள்ளவனாயிருக்கிறான். ஏனெனில் அது மனித குலத்துக்கு வெளிச்சத்தை அளித்தது. காயப்பட்ட மிருகம் அதிக கேடு விளைவிக்கும் என்று எவருமே அறிவர். உடைந்த முதுகைக் கொண்டு ஊர்ந்து வருதல்.
சாத்தான் கல்வாரியில் கீழே வீழ்த்தப்பட்டான். அதை பூமி நிரூபித்தது. கிரயத்தை செலுத்தக் கூடிய ஒரே ஒருவர் இவ்வுலகத்துக்கு வந்து கல்வாரியில் அதை நிறைவேற்றி, மிகப் பெரிய கிரயத்தை செலுத்தினார். அங்கு தான் அந்த பெரிய கிரயம் செலுத்தினார். அங்கு தான் அந்த பெரிய கிரயம் செலுத்தப்பட்டது. அது முக்கியமான காரியங்களில் ஒன்று.
25தேவனுக்கு அது அவசியமாயிருந்தது. எந்த மனிதனும் அதற்கு பாத்திரவானாகக் காணப்படவில்லை. மனிதன் எவனுமே அதைச் செய்ய முடியாது. தேவனே இறங்கி வந்து மனிதனாகி, மனித வாஞ்சையுடன் கூடிய மனித வாழ்க்கை வாழ்ந்து, கல்வாரியில் சிலுவையிலறையுண்டார். அவர் அப்படி செய்யமாட்டார், அந்த பாடுகளின் வழியே செல்லமாட்டார் என்று சாத்தான் எண்ணினான். அவர் கெத்சமனேக்கு சென்றார். அவர் மனிதனைப் போல், எந்த ஒரு மனிதனும் அனுபவியாத ஒவ்வொரு சோதனை அனைத்தும் அனுபவித்தார். அவர் கிரயத்தை செலுத்தினார். அதுதான் பூமியை அந்தகாரப்படுத்தினது.
அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுப்பது போல். மருத்துவர் ஒருவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு, அவனுக்கு முதலில் மயக்க மருந்து கொடுத்து, அவனை நினைவிழக்கப் பண்ணுகிறார். அவ்வாறே தேவனும் சபைக்கு அறுவை சிகிச்சை நடத்தின் போது, உலகத்துக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. இயற்கைக்கு வலிப்பு உண்டானது என்பதில் வியப்பொன்றுமில்லை.
தேவன் மாம்ச சரீரத்தில் மரித்துக் கொண்டிருந்தார். அந்த மணி நேரத்துக்காக உலகம் காத்திருந்தது, இருப்பினும் அநேகர் அதை அறிந்து கொள்ளவில்லை. அது இன்று நடப்பது போல். அநேகர் இவைகளுக்காக காத்திருக்கின்றனர், இருப்பினும் அவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு அதிலிருந்து தப்ப வழி தெரியவில்லை. இன்னும் அவர்கள் உலகத்தின் இன்பங்களை நாடித்தேடி, வெளியே செல்லும் வழியை அதில் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.
26அந்த நாளைச் சுட்டிக் காண்பித்த அநேக அடையாள கம்பங்கள் இருந்தன. அதற்கு ஆட்டுக்குட்டி, காளை, காட்டுப் புறா போன்றவை முன்னடையாளங்களாக இருந்தன. இருப்பினும் இவையனைத்தும் மரணத்தின் பிடியை உடைத்தெறிய முடியவில்லை. சாத்தான் அந்த பூமியை தன் கையில் கொண்டிருந்தான். ஒரு காலத்தில் அவன் இவ்வுலகத்தில், எரிந்து கொண்டிருக்கிற கற்பாறைகளின் மேல் மேலும் கீழும் நடந்தான். லூசிபர், காலையின் மகன், இந்த பூமி எரிமலையாயிருந்தபோது, அவன் பூமியின் மேல் நடந்தான். குளிர்ந்து போயிருந்த அந்த கற்பாறைகள், இயேசு கல்வாரியில் மரித்த போது, பாறைக்குழம்பை பூமியிலிருந்து கக்கின. கிரயமானது செலுத்தப்பட்டு, சாத்தானின் கட்டுகள் உடைந்தன.
27தேவன் மனிதனின் கரங்களில், அவன் எதிர்நோக்கியிருந்த அந்த வழியை மீண்டும் கொடுத்தார். அவன் இனி அழவேண்டிய அவசியமில்லை. கல்வாரியில் அவர் சாத்தானின் முதுகெலும்பை முறித்த போது - பாவம், வியாதி இவைகளின் முதுகெலும்பை - அது மானிட இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருனுக்கும் பாவ மன்னிப்பை அளித்து, அவனை தேவனுடைய சமூகத்துக்கு கொண்டு வந்துவிட்டது.
அல்லேலூயா! நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. சாத்தான் இனி ஒருபோதும் நம்மை தேவனிடமிருந்து இருட்டடைப்பு செய்து பிரிக்க முடியாது. ஒரு பெரும் பாதை உண்டாக்கப்பட்டுவிட்டது. தொலைபேசி அங்குள்ளது. மகிமைக்கு போகும் தொலைபேசி கம்பி உள்ளது. அது ஒவ்வொரு நபரையும் அந்த கம்பியின் வழியாக தேவனிடம் தொடர்பு கொள்ளச் செய்கிறது.
ஒரு மனிதன் பாவத்தில் நிறைந்திருந்தால், அந்த தொலைக் கம்பி அவனை தலைமை அலுவலகத்துக்கு சேர்த்துவிடுகிறது. அவனுடைய பாவம் மன்னிக்கப்படுகிறது. அது மாத்திரமல்ல, அந்த பாவத்துக்கான கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது. மகிமை! நீங்கள் “நான் பாத்திரவான் அல்ல'' என்று சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் பாத்திரவான்கள் அல்ல என்பது உண்மையே. நீங்கள் அதற்கு பாத்திரவான்களாக இருக்க முடியாது. ஆனால் பாத்திரமுள்ள ஒருவர் உங்கள் இடத்தை எடுத்துக் கொண்டுவிட்டார். நீங்கள் சுயாதீனர். நீங்கள் இனி சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் இவ்வுலகில் இன்பத்தை நாடும் மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில்:
%இம்மானுவேலின் இரத்தத்தால்
%நிறைந்த ஒரு ஊற்றுண்டு
%பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கி
%தங்கள் பாவக்கறையை போக்கிக் கொள்கின்றனர்.
நீங்கள் இழக்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு பெரும்பாதையும் பாதையும் உள்ளது. அது பரிசுத்த வழி என்னப்படும். தீட்டுள்ளவன் அதிலே நடந்து வருவதில்லை. ஏனெனில் அவன் முதலில் ஊற்றண்டை வந்து, அதன் பிறகு பெரும் பாதையில் பிரவேசிக்கிறான்.
28அவர் சாத்தானின் வல்லமைகளை முறித்துப்போட்டார். அவர் நரகத்தின் சிறைக் கதவுகளைத் திறந்தார். மரணம் எவ்விதமாயிருக்குமோ என்று பயந்து இவ்வுலகமாகிய சிறையில் அடைப்பட்டிருந்த ஒவ்வொரு மனிதனையும், அவர் கல்வாரியில் சிறைக் கதவுகளைத் திறந்து விடுவித்தார். நீங்கள் இனி ஒருபோதும் பாவத்தினால் அடிமைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் அவயவங்களை நீங்கள் இனி ஒருபோதும் பாவத்துக்கும், குடி பழக்கத்துக்கும், புகை பிடித்தலுக்கும், சூதாட்டத்துக்கும், பொய் சொல்லுதலுக்கும் ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் உத்தமமும், நீதியும், நேர்மையுமுள்ளவர்களாக இருக்கலாம். சாத்தான் ஒன்றுமே செய்ய முடியாது. ஏனெனில் நீங்கள் ஜீவக் கம்பியை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். அது காலங்கள் தோறும் உள்ள கன்மலையில் நங்கூரமிடப்பட்டுள்ளது. அதிலிருந்து எதுவுமே உங்களை அசைக்க முடியாது. எந்த புயல் காற்றும் அதிலிருந்த உங்களை அசைக்க முடியாது. எதுவுமே, மரணம்கூட, கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமுடியாது.
29அது தான் கல்வாரியின் அர்த்தம். அடிமைத்தனத்திலிருந்த மனிதன் விடுவிக்கப்பட்டான். ஒரு காலத்தில் மரண பயத்திலிருந்த மனிதன் இனி ஒருபோதும் மரணத்துக்கு பயப்பட வேண்டியதில்லை. தேவன் கட்டி உண்டாக்கின நகரத்துக்காக வாஞ்சிக்கும் மனிதன் பெரும் பாதையில் காலடி எடுத்து நடக்கலாம். ஏனெனில் அவன் சுயாதீனன். அல்லேலூயா! அவன் மீட்கப்பட்டுவிட்டான். அவன் இனி சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் நீங்கள் சரியா இல்லையா என்று கண்டு கொள்ளக் கூடிய வழி ஒன்றுண்டு. தேவன் நமக்கு ஜீவனை தந்திருக்கிறார். நம்முடைய பாவங்கள் போய்விட்டன. அந்த நாள் கல்வாரியில் நிகழ்ந்த சம்பவம் அதற்கான கிரயத்தை செலுத்தினது.
அதையெல்லாம் நாம் காணும்போது, கவிஞன் இவ்வாறு எழுதியதில் வியப்பொன்றுமில்லை:
%பிளவுண்ட பாறைகளுக்கும் இருண்ட வானத்துக்கும் நடுவே
%என் இரட்சகர் தலையை சாய்த்து ஜீவனை விட்டார்
%திறவுண்ட திரை பரலோக சந்தோஷத்துக்கும்
%முடிவற்ற நாளுக்கும் வழியைக் காண்பித்து கொடுத்தது.
30ஆபிரகாம் ஒரு நகரத்தைத் தேடி இனி நாடு முழுவதும் அலைய வேண்டிய அவசியமில்லை. பாவி, தான் இரட்சிக்கப்படுவானோ இல்லையாவென்று இனி சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. வியாதிப்பட்டவன், தான் சுகம் பெறுவானா இல்லையாவென்று இனி சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. கல்வாரியில் அந்த நாளில் திறக்கப்பட்ட திரை முழு வெற்றிக்கு வழியைக் காண்பித்து கொடுத்தது. இவை எல்லாவற்றின் மேலும் வெற்றியுடன் வாழ தேவன் தமது ஆவியின் வல்லமையை நமக்கு தந்திருக்கிறார். நாம் விசுவாசிக்க வேண்டும் என்று மாத்திரமே நம்மைக் கேட்கிறார். அது கல்வாரியில் அந்த நாளில் நிகழ்ந்தது.
அதைப் போன்ற ஒரு நாள் முன்பு இருந்ததும் இல்லை, இனி இருக்கப் போவதுமில்லை. அது இனிமேல் அவசியமில்லை. கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது, நாம் மீட்கப்பட்டுவிட்டோம். தேவனுக்கு ஸ்தோத்திரம், நாம் மீட்கப்பட்டுவிட்டோம்.
அதைக் குறித்து இனி ஒரு போதும் நீங்கள் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை, அதைக் குறித்து ஊகிக்கவேண்டிய அவசியமில்லை. எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டது. திரை நீக்கப்பட்டுவிட்டது. நாம் பெரும் பாதையில் சந்தேகப்படுகிறவர்களாய் அல்ல, விசுவாசிக்கிறவர்களாய்- நடந்து சென்று கொண்டேயிருந்து, தேவனுடைய மகத்தான சமூகத்தை அடையவேண்டும்.
31ஆபிரகாமும் மற்றவர்களும் அந்த நகரத்தை தேடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் என்பதை அறிந்திருந்தனர். அவர்களுக்கு ஏதோ சம்பவித்தது. அவர்கள் முடக்கப்பட்ட உலகில் வாழ்ந்து வந்தனர். பூமியதிர்ச்சிகள் நேர்ந்தன, புயல்கள் தோன்றின், சண்டைகளும் கொலைகளும் நடந்தன. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றையொன்று தின்றன அல்லது ஓநாய் ஆட்டுக் குட்டியை தின்றது. சிங்கம் காளையைத் தின்றது. எதுவுமே சரியாக காணப்படவில்லை. எங்கோ தவறுள்ளது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மனிதர்களில் சகோதரன் சதோதரனைக் கொன்று போட்டான், தகப்பன் மகனைக் கொன்று போட்டான், மகன் தகப்பனைக் கொன்று போட்டான். எங்கோ தவறிருந்தது. மனிதனுக்கு வயதாகிக் கொண்டே சென்றது, அவன் மரிக்கிறான், அவன் உதிர்ந்து போகிறான். வியாதி அவனைத் தாக்குகிறது. அவன் அடிமைத்தனத்தில் இருக்கிறான். மரங்கள் வளர்ந்து சாகின்றன. மலைகள் உருமாறுகின்றன. கடல்கள் உலர்ந்து போகின்றன. எங்கோ தவறுள்ளது. இவை நடக்காத ஒரு இடத்தை ஒரு நகரத்தை மனிதன் தேடினான். அவன் எப்பொழுதாவது இவைகளை சரியாக சிருஷ்டித்தவரின் சமூகத்தை அடைவானானால், அவரிடம் இதைக் குறித்து பேசப் போவதாக எண்ணியிருந்தான்.
32பாவியே, இப்பொழுது வழி உனக்குள்ளது என்பதை இக்காலை வேளையில் அறிந்து கொள்வது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! கல்வாரியில் அந்த நாள் வழியைத் திறந்து கொடுத்தது. கோத்திரப்பிதாக்கள் அனைவரும் அவரைத் தேடி அலைந்தனர், அதை அவர்கள் தேடினர். ஆனால் கல்வாரியோ அதை உனக்கு இலவசமாக அளித்தது.
அதை எப்படி உன்னால் புறக்கணிக்க முடியும்? ஒரு ஸ்தாபனத்தை சேருவதற்கென அதை நீ எப்படி புறக்கணிக்கலாம்? உலகத்தின் சிற்றின்பங்களுக்காக நீ எப்படி அதை புறக்கணிக்கலாம்? அதை ஏன் நீ ஏற்றுக்கொள்ளக் கூடாது?
திரைச்சீலை திறக்கப்படுதலானது ஒருமனிதனை, அவன் மீது எந்த விதமான ஒரு பாவம் இல்லாதவனாக சரியாக தேவனுடைய சமுகத்தில் கொண்டு வந்து, அவன் தேடிக் கொண்டிருக்கின்றதான, பரலோகம், மகிமை, சமாதானம், நித்திய ஜீவன், மற்றும் எல்லாவற்றையும் அவன் முன் கொண்டு வந்து அதற்கான பாதையை அவனுக்கு முன்பாக அமைத்துக் கொடுக்கின்றது.
33அந்த நாள் சாத்தானின் வல்லமைக்கு மரண அடியாக திகழ்ந்தது. அது எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வந்தது. அவரை அங்கு என்னால் காண முடிகிறது. விசுவாசத்தினாலே ஆபேல் ஏதேனின் ஆட்டுக்குட்டியை காயீனிலும் மேலான பலியாக தேவனுக்கு செலுத்தின்போது, அது அவரைக் குறித்த முதலாம் நிழலாகத் திகழ்ந்தது.
ஆபேல் திராட்சைக் கொடியை ஆட்டுக்குட்டியின் கழுத்தில் சுற்றி, அதை கற்பாறை வரைக்கும் இழுத்துக் கொண்டு சென்று, ஒரு கல்லைக் கத்தியாக உபயோகித்து, அதன் தலையை சற்று பின்னால் தள்ளி, அந்த கல்லால் கழுத்தை அறுத்திருப்பான். அப்பொழுது இரத்தம் பீறிட்டு வந்து அதன் உரோமத்தை நனைத்திருக்கும். அது தன் சொந்த இரத்தத்தில் புரண்டது. அது ஒரு நிழல்,
ஆனால் அந்த நாளில் கல்வாரியில், இந்த பூமியிலிருந்த ஒரு ஆட்டுக்குட்டி - அது தேவ ஆட்டுக்குட்டி - மரித்து, தன் சொந்த இரத்தத்தில் புரண்டு கொண்டிருந்தது. அவர் துண்டமாக வெட்டப்பட்டு, அடிக்கப்பட்டு, துப்பப்பட்டு, அறையப்பட்டார். எல்லாவற்றையும் உலகம் அவருக்கு செய்தது. இரத்தம் அவருடைய தலை மயிரிலிருந்து சொட்டினது.
34ஆபேலின் ஆட்டுக்குட்டி சாகும்போது, ஆபேல் புரிந்து கொள்ள முடியாத ஒரு பாஷையை அது பேசினது. அது ஆட்டின் சத்தத்தை உண்டாக்கினது. தேவனுடைய ஆட்டுக்குட்டி அந்த நாள் கல்வாரியில், ''என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?'', என்று அர்த்தங்கொண்ட, யாருக்குமே புரியாத பாஷையில் பேசினார். அது துண்டம் துண்டமாக வெட்டப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி.
ஆபேல் மனதில் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியானவர் அவரே. அப்பொழுது அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஸ்திரீயின் வித்தைக் கண்டான். தானியேல் இந்த ஆட்டுக்குட்டியானவரை கைகளால் பெயர்க்கப்படாத கல்மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வருவதாகக் கண்டான். அவர் தீர்க்கதரிசிகளுக்கு சக்கரத்துக்குள் சக்கரமாக இருந்தார். அவர்கள் முன்கூட்டி கண்ட அனைத்தும் கல்வாரியில் அந்த நாளில் நிறைவேறினது. அது பெரிய காரியத்தை செய்தது. அது சாத்தானின் முதுகை உடைத்தது.
35முதலாவதாக அந்த நாளின் முக்கியத்துவம் என்னவென்று நாம் அறிய வேண்டும். இரண்டாவதாக, அந்த நாள் நமக்கு என்ன செய்ததென்று நாம் காண வேண்டும். மூன்றாவதாக அந்நாளைக் குறித்து நாம் என்ன செய்ய வேண்டுமென்று காண் போம். நாம் என்ன செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம், என்று.
முதலாவதாக, அதை நாம் ஆராய வேண்டும். ஏனெனில் அது ஒரு மகத்தான நாள், எல்லா நாட்களைக் காட்டிலும் மிக மகத்தான நாள். பாவத்துக்கான கிரயம் அன்று செலுத்தி தீர்க்கப்பட்டது. சாத்தானின் வல்லமை முறிக்கப்பட்டது. அதற்கு பதிலாக நாம் என்ன செய்யவேண்டுமென்று இப்பொழுது காண்போம்.
இயேசு அந்தநாளில் கல்வாரியில் மரித்த போது, அவர் நமது பாவங்களுக்காககிரயத்தை செலுத்தினது மாத்திரமல்ல, அவரை நாம் பின்பற்றுவதற்கெனஒரு வழியை உண்டாக்கினார். விழுந்து போன ஆதாமின் சந்ததியாராகிய நாம் அவரைப் பின்பற்றுவதற்கென கல்வாரியில் அந்த நாளில் கிறிஸ்துவினால் மீட்கப்பட்டோம்.
36அவர் கல்வாரியில் மரித்தபோது ஒரு வழியை உண்டாக்கினார். அவர் ஆவியைவிட்டார். நீங்களும் நானும் பிழைப்பதற்கென அது பரிசுத்த ஆவியாய் உலகிற்கு அனுப்பப்பட்டது. அவரை நாம் பின்பற்ற வேண்டும் என்பதே கல்வாரியின் நோக்கம்.
முதலாவதாக அதை ஆராய்ந்து, அது நமக்கு என்ன செய்ததென்று காணுதல். இப்பொழுது அதைக் குறித்து நாம் என்னசெய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம்? நீங்களும் நானும் என்னசெய்ய வேண்டும்? நாம், ''அதை நான் பாராட்டுகிறேன். அது மிகவும் அருமையான செயல் எனலாம். ஆனால் அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதை ஏற்றுக் கொள்ளுதல் என்பது கிறிஸ்து என்னும் நபரை நமது இருதயங்களில் ஏற்றுக்கொள்வதாகும். அப்பொழுது நாம் பாவத்திலிருந்து விடுதலையடைகிறோம். அதனால், பாவக்கட்டுகள் நம் மீது தொங்குவதில்லை. தேவன்... நாம் பாவமே செய்யாதது போல்...
பரிபூரண பலி நம்மை பூரணமாக்கினது. இயேசு, ''பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல், நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்“ என்று கூறினார். நாம் செய்வதற்கு வேறொன்றுமில்லை. ஏனெனில் தேவனுடைய சமூகத்தில் நாம் பூரண சற்குணராக்கப்படுகிறோம்.
37அங்கு தான் நம்முடைய ஸ்தானத்தை நாம் இழக்கக் கூடியவர்களாயிருக்கிறோம். நாம் கவனமாயிராமல் போனால், நாம் திரும்பி நம்முடைய முன் நிலையை பார்க்க முயல்வோம். அப்பொழுது பலி நமக்கு அர்த்தமற்றதாகிவிடும். ஓ, சபையே, அதை உன்னால் காண முடியவில்லையா? அந்த வேலையை நான் செய்ய முயலமாட்டேன். என்னால் முடியாது, உங்களாலும் முடியாது. அதை முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் செய்தவைகளை திரும்பிப் பார்த்தால், இழக்கப்படுவீர்கள். நீங்கள் செய்தவைகளைப் பாராமல், அந்த நாளில் கல்வாரி உங்களுக்கு என்ன செய்ததென்று பாருங்கள்.
அது உங்கள் கிரயத்தை செலுத்தினது. அந்த பிரச்சினையை தீர்த்தது. “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். அப்பொழுது உங்களில் பாவமேயில்லை. நீங்கள் முற்றிலும் பாவமில்லாதவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்திருந்த போதிலும் அல்லது என்ன செய்தாலும், நீங்கள் அப்பொழுதும் பாவமில்லாதவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ள வரைக்கும், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மன்னிக்கப்படும் எதுவும் போக்கப்பட்டு மறக்கப்படுகின்றது.
அப்படியானால் அது என்ன செய்கிறது? அந்த நிலைக்கு நீங்கள் வந்த பிறகு, அவரைப் பின்பற்ற அது உங்களுக்கு அவருடைய ஆவியை அளித்து, அவர் செய்ததையே மற்றவர்களும் பின்பற்றி செய்யும்படி செய்கிறது.
38அவர் ஒருவர் மாத்திரமே பரிபூரணமான மனிதர். அவர் தமது ஜீவனைக் கொடுத்து, உங்களுக்கு மாதிரியையும் வைத்துள்ளார்.
இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?முதலாவதாக நான் கூற விரும்புவது என்னவெனில்: இயேசு தமக்கென ஒருபோதும் வாழவில்லை. அவருடைய வாழ்க்கை பிறருக்காக செலவிடப்பட்டது. அதுதான்முற்றிலுமாக நித்திய ஜீவன். நீங்கள் சபைக்குச் சென்று நல்ல காரியங்களைச் செய்வதாக கூறலாம். அது நல்லது. ஆனால் நீங்கள் உங்களுக்கென வாழ்ந்தால், உங்களுக்கு நித்திய ஜீவன் இல்லை. நித்திய ஜீவன் பிறருக்காக வாழ்வதே.
அது தேவ ஆட்டுக்குட்டிக்குள் வந்தபோது அதை நிரூபித்தது. அவர் நித்திய ஜீவனைக் கொண்டவராய் வாழ்ந்தவர். ஏனெனில் அவர் தமக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்தார். அந்த நாளை நீங்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம் பரிசுத்த ஆவியை பெறுகிறீர்கள். அதன் பிறகு நீங்கள் உங்களுக்கென ஒருபோதும் வாழ்வதில்லை. நீங்கள் பிறருக்காகவே வாழ்கின்றீர்கள்.
39யாரோ ஒருவர், ''உங்களை மோசமான பெயரால் யாராவது அழைக்கும் போது அதை பொறுத்துக் கொண்டு எப்படி உங்களால் சும்மா இருக்க முடிகிறது?'' என்று கேட்டார். நீங்கள் உங்களுக்காக வாழ்வதில்லை. மற்றவர்களை மீட்டுக் கொள்வதற்கென நீங்கள் அவர்களுக்காக வாழ்கின்றீர்கள். நீங்கள் குமாரராகின்றீர்கள். தொல்லை என்னவெனில், சபையானது அது குமாரர்கள் என்பதை மறந்துவிட்டது. நீங்கள் குமாரர்கள். நீங்கள் கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே உங்களுக்காக வாழாதீர்கள், பிறருக்காக வாழுங்கள்.
“நல்லது, சகோ. பிரன்ஹாமே, இந்த மனிதன் நிச்சயமாக நல்லவர். எனவே அந்த சகோதரனுக்காக என்னால் வாழ முடியும்.'' அதுவல்ல. உங்களைப் பகைக்கிற மனிதனுக்காக வாழுங்கள். கூடுமானால் உங்களைக் கொன்றுபோட மனதுடைய அந்த மனிதனுக்காக வாழுங்கள். அதைத்தான் அவர்கள் இயேசுவுக்கு செய்தனர். அவர்கள் அவரைக் கொன்றனர். அவர்கள் இரட்சிப்பதற்காக அவர் மரித்தார். அது தான் நித்திய ஜீவன். அதை உங்கள் மார்பில் பெறும்போது, நீங்கள் பரலோகத்தை நோக்குகின்றீர்கள். உங்களுக்கு சொந்தமானவைகளை நீங்கள் தியாகம் செய்கின்றீர்கள்- செம்மறியாடு தன் உரோமத்தை கொடுப்பது போல், அவைகளைக் கொடுத்துவிடுகிறீர்கள். நீங்கள் கல்வாரியை நோக்குகின்றீர்கள்.
40இது உங்களை அந்த நிலைக்கு கொண்டு வர உதவும் என்று நம்புகிறேன்... அது தான் இந்த கூடாரத்திலுள்ளவர்களும் மற்றவர்களும் செய்ய வேண்டியது - நீங்கள் யாரென்றும், நோக்கம் என்னவென்றும்.
சபைக்கு செல்வது இசை இசைத்து பாடல்களைப் பாடுவதற்கல்ல. சபை என்பது திருத்தும் இடம். நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் தொடங்குகிறது. நாம் நம்மை மரித்தவர்களாகவும் பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக் கொள்ள வேண்டும். நம்மை அவருடைய சேவைக்கென்று தியாகம் செய்து அவரைப் பின்பற்ற அவர் வழியை உண்டாக்கியிருக்கிறார். அவரை நாம் பின்பற்றும் போது, அவர் வாழ்ந்த வாழ்க்கையை நாமும் வாழ்கிறோம். அது அருமையானது. இயேசு அதைக்குறித்து சொல்லியிருக்கிறார்... வேதத்திலிருந்து சில பாகங்களை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன். கூர்ந்து கவனியுங்கள். இதை இழந்து போக வேண்டாம்.
41அந்த நாளிலே இயேசு ஜனங்களை செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிப்பது போல் பிரிப்பாரென்று கூறியுள்ளார். அவர் செம்மறியாடுகளை நோக்கி “என் வலது பக்கத்தில் நில்லுங்கள்” என்பார். அப்பொழுது அவர் வெள்ளாடுகளை நோக்கி, ''என் இடது பக்கத்தில் நில்லுங்கள்'' என்பார். ஏனெனில் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு போஜனம் கொடுக்கவில்லை. காவலில் இருந்தேன், நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை, வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங் கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை. வியாதியுள்ளவனாயிருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை'' என்பார். செம்மறியாடுகளைப் பார்த்து அவர், ''பசியாயிருந்தேன், எனக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள். வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்'' என்பார். கவனியுங்கள். சபையே, இதை காணத் தவறாதே. இதை என்றென்றைக்கும் உன் இருதயத்தில் வைத்துக்கொள். இவை அறியாமல் செய்யப்பட்டன. ஜனங்கள் இதை கடமைக்கென்று செய்யவில்லை. ஒரு மனிதன், அவன் கொடுக்க வேண்டும் என்பதனால் உங்களுக்கு ஏதாவதொன்றை கொடுத்தால், கடமைக்கென உங்களுக்கு போஜனம் கொடுத்தால், அவனுக்கு சுயநல கருத்து உள்ளது. அது உங்கள் வாழ்க்கையுடன் இணைந்து நீங்கள் அறியாமலேயே செய்யப்படும் ஒன்றாக இருக்கவேண்டும்.
42இந்த செம்மறியாடுகள் அதிசயப்பட்டனர். அவர்கள், “ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனம் கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டு உம்மிடத்தில் வந்தோம்?'' என்றனர். அது தானாகவே அன்பின் நிமித்தம் தோன்றினது. அது அவர்களில் வாழ்ந்த ஜீவன்.
கல்வாரி நமக்கென்ன செய்ததென்று தேவன் காணும்படி செய்வாராக. அது தானாகவே. “எப்பொழுது நீர்... ஆண்டவரே? நாங்கள் அறியவேயில்லையே''.
இயேசு திரும்பிப் பார்த்து என்ன கூறினார் என்று பாருங்கள். இவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள். தன்னலமற்ற வாழ்க்கை. அதை யோசித்து செயல்படுவதில்லை. நீங்கள் இவ்வுலகத்துக்கு அவ்வளவு மரித்து, கிறிஸ்துவுக்குள் பிழைத்து, பெரும்பாதையில் நடந்து கொண்டிருப்பதனால், அது உங்களை அறியாமலே தானாகவே உண்டாகும் செயல். நீங்கள் தானாகவே அதைச் செய்கிறீர்கள்.
43“இதை நான் செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்'' என்றல்ல. நீங்கள் அவருடைய ஒரு பாகமாயிருக்கிறீர்கள். அவருடைய ஆவி உங்களுக்குள் இருக்கிறது. அவர் நடந்து கொண்ட விதமாக நீங்கள் நடந்து கொள்கிறீர்கள். உங்களுக்கு விளங்குகிறதா? ”மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு, அதின் முடிவோ மரண வழிகள். (நீதி. 14:12). ''பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே “கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை'' (மத். 7:21)- அவர்களுடைய இருதயத்திலிருந்து, தடைஎதுவுமின்றி.
நாம் அவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக கல்வாரியில் அந்த நாளில் கிரயம் செலுத்தப்பட்டது. ''உங்களுக்குத் தெரியுமா, ஜோன்ஸ் விதவைக்கு ஒரு சமயம் நிலக்கரி இல்லாமல் இருந்தது. நான் போய் அவளுக்கு நிலக்கரி வாங்கிக்கொடுத்தேன்'' உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு 'சூட்'தேவைப்பட்ட ஒரு சகோதரனைப் பார்த்தேன். நான் போய் அவருக்கு அதை வாங்கிக் கொடுத்தேன். நான் கிறிஸ்தவன் என்பதனால் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்'' என்றல்ல. ஓ, என்னே தன்னலமுள்ள, தரித்திரமுள்ள, பரிதபிக்கப்படத்தக்க மனிதனே: நீ ஒரு மாய்மாலக்காரன். உன் இடது கை செய்கிறதை உன் வலது கை அறியாமலும், உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாமலும் இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் மரித்து அதை தானாகவே எப்படியும் செய்கிறீர்கள். அது உங்கள் சுபாவம், அது உங்கள் அமைப்பு. நீங்கள் எப்படியும் அதை செய்கிறீர்கள். அது உங்களுக்குள் வாழும் ஜீவன். நீங்கள் முழுவதுமாக அந்த ஆவிக்கு ஒப்புவித்து, அது உங்களுக்குள் தங்கியிருந்து உங்கள் மூலம் வாழ்கின்றது.
44ஓ, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியை நீங்கள் உணருகிறீர்களா? அந்த ஜீவனை. “இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்'' என்றான் பவுல், தானாகவே.
''நல்லது, சகோ. பிரன்ஹாமே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இங்குள்ள நாங்கள் கிறிஸ்தவர்கள். இந்த ஜனங்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். ''ஓ, என்னே! உங்களுக்கு அவமானம்! அது கிறிஸ்தவ மார்க்கம் அல்ல. கிறிஸ்தவ மார்க்கம் என்பது தானாகவே இயங்கும் ஒன்று. அதைக் குறித்து நீங்கள் எல்லாவற்றையும் மறந்து... செயல்படுகிறீர்கள்.
கிறிஸ்து தம்முடைய ஜீவியத்தை முழுவதுமாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். அவர் தம்மை பொது மக்களின் ஊழியராக ஜனங்களுக்கு அர்ப்பணித்தார். அவர் தமது ஜீவனை இலவசமாகக் கொடுத்தார். அவர் அதைசெய்ய வேண்டியதில்லை. அவர் அதை கடமை கட்டாயத்துக்காக செய்யவில்லை. அவர், “சகோதரனே, உங்களுக்காக நான் மரிக்க வந்ததனால், என்னைக் குறித்து நீங்கள் எல்லோரும் உயர்வாக நினைக்க வேண்டும்'' என்று கூறவில்லை. அதைக் குறித்து அவர் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அவர் எப்படியும் மரித்தார். ஏனெனில் அது அவருக்குள் இருந்த தேவன். அது உங்களுக்குள் இருக்கும் தேவன். உனக்குள் இருக்கும் தேவனே மற்றவர்களைப் பார்த்து பரிதாபம் கொள்ளச் செய்கிறார்.
45செம்மறியாடுகள் ஒரு பக்கம்.
வெள்ளாடுகள், ''ஆண்டவரே, நான் இதை செய்தேன், அதை செய்தேன்'' என்பார்கள்.
அவர், ''அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள். நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை'' என்பார்.
சபை மாத்திரம் அந்த அடிப்படை உண்மைகளுக்கு வருமானால் அது நீங்கள் செய்ய முயற்சிக்கும் ஒன்றல்ல. அதை செய்யவேண்டும் என்று நினைத்து செய்வதல்ல. அது உங்களுக்குள் பிறந்திருக்கும் ஒன்று.
46என் பெந்தெகொஸ்தே சகோதரரே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் பெந்தெகொஸ்தேகாரன்தான். என் பெந்தெகொஸ்தே சகோதரர் தங்களுக்கு வேகமான இசை, மேளம் கொட்டுதல், கைகளைத் தட்டுதல் அல்லது கஞ்சிரா அடித்தல், சத்தமிடுதல் போன்றவை இருக்க வேண்டும் என்னும் நிலையை அடைந்துள்ளனர். அது உணர்ச்சிவசப்படுதல் யுத்தத்தின் உணர்ச்சியைப் பெற யுத்தத்துக்குப் போவதற்கு முன்பு “பாண்டு (band) வாத்தியங்களை வாசிக்கின்றனர். நானும் இசையில் நம்பிக்கை கொண்டவன், கைகளைக் கொட்டுதலில் நம்பிக்கை கொண்டவன். இவைகளில் நான் நம்பிக்கை கொண்டவன். அது முற்றிலும் உண்மை. இவைகள் நமக்கு வேண்டும். ஆனால் முக்கியமான காரியங்களை நீங்கள் செய்யாமல் விட்டுவிடுகிறீர்கள். அந்த தியாகமுள்ள வாழ்க்கை, தேவன் உங்களுக்குள் வாழ்ந்து தானாகவே சரியானவைகளைச் செய்தல், அதைக் குறித்து நினைத்தும் கூடப் பார்க்காமல் அப்படியே தொடர்ந்து செய்தல், அதை வாழுதல் போன்றவைகளை. நீங்கள் அப்படி வாழ்ந்தால் என்ன நடக்கிறதென்று பாருங்கள். அப்பொழுது நீங்கள் பெரும் பாதையில் நடந்து செல்லுகிறவர்களாய் இருப்பீர்கள். அப்பொழுது கல்வாரி உங்களுக்கு அர்த்தமுள்ளதாய் இருக்கும். அந்த நாளில் அந்த பெரும்பாதை உங்களுக்கு திறந்து கொடுக்கப்பட்டிருக்கும்.
47இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் பாதி வெள்ளாடாகவும் பாதி செம்மறியாடாகவும் இருக்க முடியாது. அவை கலவாது. அநேகர், ''ஆம், என்ன தெரியுமா? எங்கள் குழுவில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். நாங்கள் எளியோருக்கு உதவி செய்கிறோம். நாங்கள் இதை செய்கிறோம்'' என்கின்றனர். உங்கள் செயல்களை பகிரங்கப்படுத்துகிறீர்கள். நீங்கள் அப்படி செய்யக்கூடாது. உங்கள் தர்மங்களை நீங்கள் அப்படி செய்யக் கூடாது. உங்கள் தர்மங்களை நீங்கள் அந்தரங்கத்தில் செய்ய வேண்டுமென்று இயேசு கூறியுள்ளார். அது தானாகவே உங்களில் உண்டாக வேண்டிய ஒன்று.
நீங்கள் சென்று தாகத்துக்கு தண்ணீர் பெறுவது போன்றது அது. நீங்கள் தாகமாயிருக்கிறீர்கள். அடுத்தவன் தாகமாயிருந்தால், அவனுடைய தேவையை உங்கள் தேவையைப் போல் பாவித்து, அவனுக்கும் தண்ணீர் கொண்டு கொடுத்துவிட்டு, அதைக் குறித்து ஜம்பமடித்துக் கொள்ளாமல், எப்பொழுதும் போல் வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள்.
48நீங்கள் பாதி செம்மறியாடாகவும் பாதி வெள்ளாடாகவும் இருக்க முடியாது. நீங்கள், “எங்கள் சபையில் ஒரு சங்கம் உள்ளது, நாங்கள் ஏழைகளுக்கு உதவி செய்கிறோம். நாங்கள் இதை அதை மற்றதை செய்கிறோம்,'' என்கிறீர்கள். ஆனால் கிறிஸ்துவின் ஜீவன் உங்களுக்குள் இல்லாமல் இவைகளை யெல்லாம் செய்வீர்களானால், அதை முற்றிலும் வீணாகச் செய்கிறீர்கள். இயேசு....
I கொரிந்தியர் 13ல், பவுல் “எனக்கு உண்டானயாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை'' என்கிறான். அது கடினமானது, ஆனால் உண்மை. அந்த உண்மைக்கு நீங்கள் வரவேண்டியவர்களாயிருக்கிறீர்கள். கல்வாரி உங்களுக்கு செய்ததை அறிந்து கொள்ளுங்கள்.
49நாம் கல்வாரியை நோக்கி, “ஓ, ஆமாம், அது அருமையானது'' என்கிறோம். அதுவல்ல. தேவனுடைய குமாரன் சிலுவையிலறையப்பட கல்வாரிக்கு செல்ல வேண்டியதாயிருந்தது போல், ஒவ்வொரு குமாரனும் ஒருகல்வாரிக்கு செல்ல வேண்டும். அவனுக்கும் ஒரு கல்வாரி இருக்க வேண்டும். உங்களுக்கு கல்வாரியில் அந்த நாள் இருக்க வேண்டும். எனக்கு கல்வாரியில் அந்த நாள் இருக்கவேண்டும். அது பாவப் பிரச்சினையை தீர்க்கும். போதகருடன் கைகுலுக்கி அல்லது ஒரு கடிதத்தின் மூலம், அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்து சபைக்குள் நுழைந்து கொள்வதல்ல, நீங்கள் பிறப்பின் மூலம் வரவேண்டும்.
அவர் கடிதத்தை கொடுக்கவில்லை, அவர் பகிரங்க அறிக்கையை கொடுக்கவில்லை, அவர் பிறப்பைக் கொடுத்தார். அப்படித் தான் நாம் உள்ளே வருகிறோம். அன்று முதல் நாம் தானாகவே கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கிறோம்.
50வேறொரு குறிப்பு. பாதி செம்மறியாடு, பாதி வெள்ளாடு. அப்படியொன்று கிடையாது. நீங்கள் பாதி வெள்ளாடு, பாதி செம்மறியாடாக இருக்க முடியாது. நீங்கள் ஒன்று வெள்ளாடாக இருக்கவேண்டும். அல்லது செம்மறியாடாக இருக்க வேண்டும். நீங்கள் நல்ல காரியங்களைச் செய்து அதன் மூலம் உள்ளே பிரவேசித்துவிடலாம் என்று எண்ணினால், கல்வாரி நாள் ஒன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. நியாயப்பிரமாணம் அவ்வாறு கூறினது. ஆனால் நாம் சபை அங்கத்தினர்களாக இருக்கக் கூடாது. தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் கல்வாரியில் ஒரு நாளை கழித்தார்.
அது தான் கல்வாரியில் அந்த நாள். அதுதான் உங்களுக்கு முக்கியம் வாய்ந்த நாள். அப்படியானால், இயேசுவைப் பின்பற்றி அவரைப் போல நடந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது, நதி, ஒரே நேரத்தில் மேலும் கீழும் ஓடுவதில்லை. அது ஒரு திசையில் மாத்திரம் ஓடுகிறது. தேவனுடைய ஆவியும் அது போல் ஒரு வழியில் மாத்திரமே ஓடுகிறது. அதனுடன் சிலவற்றை அது கலப்பதில்லை, ஒரே வழியில் தான் செல்கிறது.
51நான் முடிக்கப்போகும் தருணத்தில், இயேசுவைக் கவனியுங்கள். அவர், ''நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்'', என்று கூறினார். இங்குள்ள சபைக்கு இதை நான் அவ்வளவாக கூறவில்லை, உங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த செய்திகள் ஒலிப்பதிவு செய்யப்படுகின்றன. உலகம் பூராவும் ஆயிரக்கணக்கானவர் இதைக் கேட்கின்றனர். குற்றம் கண்டு பிடிக்கிறவனிடம் இந்த கேள்வியை இப்பொழுது கேட்க விரும்புகின்றேன். அநேக முறை என்னிடம், “வேதாகமத்தை விசுவாசிக்க உங்களுக்குப் பிரியமா?'' என்று கேட்கப்படுகிறது. இயேசு, ”நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்'' என்றார்.
52மிஸ்டர், எவ்வளவு மோசமாக நீங்கள் ஆக முடியும்? உங்கள் நுண்ணறிவு படைத்த வேத சாஸ்திரங்களைக் கொண்டும், அறிவில் விளைந்த கருத்தைக் கொண்டும், சிந்தனைகளைப் பகுத்தறிதலை விட்டு நீங்கள் எவ்வாளவு தூரம் அலைய முடியும்? என் கிருபையுள்ள, இழந்து போன நிலையிலுள்ள நண்பர்களே, இந்த வேதாகமம் ஆவிக்குரிய விதமாய் வியாக்கியானம் செய்யப்பட்ட ஒன்று என்பதை உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா? பிதா இதை கல்விமான்களுக்கும் ஞானிகளுக்கும், கல்வி கற்றவர்களுக்கும் புத்திசாலிகளுக்கும் மறைத்து, கல்வாரிக்கு வர மனதாயுள்ள பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் இயேசு அவரை ஸ்தோத்தரித்தார்.
53இப்பொழுது கவனியுங்கள். இயேசு சொன்னார். அவர் எவ்வாறு இதை கூறினார் என்பதை கவனியுங்கள். “நான் செய்கிற கிரியைகளை...'' (அவர் அப்பொழுது செய்து வந்த கிரியைகளை). ''நான் தற்பொழுது செய்து வருகிற கிரியைகளை - வியாதியஸ்தரை சுகப்படுத்தல், மரித்தோரை எழுப்புதல், குருடரின் கண்களைத் திறத்தல் போன்ற இந்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். என்னை நீங்கள் விசுவாசித்தால், இந்த கிரியைகளை நீங்கள் செய்வீர்கள். ஏனெனில் நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறேன். இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உங்களுடன் வாசம் பண்ணி, உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுக்குள்ளே இருப்பேன். அவர் பரிசுத்த ஆவியாகிய வேறொருதேற்றரவாளனை உங்களுக்கு அனுப்புவார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது. நீங்களோ அவரை ஏற்றுக் கொள்வீர்கள்'' என்றார்.
54இப்பொழுது கவனியுங்கள், பெரிய கிரியைகள் என்பது ஜெபத்தினால் வியாதியஸ்தரை சுகப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும் மாத்திரம் சபையில் உள்ள வல்லமை அல்ல, அது விசுவாசிகளுக்கு நித்திய ஜீவனை அளிக்கவும் கூட. பரிசுத்த ஆவி வந்து ஜீவனை அளிக்கும் பொறுப்பை சபையின் கையில் தந்திருக்கிறார். ஓ, அதுதான் கல்வாரியின் அர்த்தம்.
அது தொங்கிப்போன, இழிவான மனிதரையும் ஸ்திரீகளையும் எடுத்து அவர்களை தேவனுடைய குமாரர், குமாரத்திகள் என்னும் ஸ்தானத்துக்கு உயர்த்தி, வியாதியஸ்தரை சுகப்படுத்தவும், நித்திய ஜீவனை அளிக்கவும் செய்தது. கீழ்ப்படிதலுள்ள விசுவாசிகளுக்கு பரிசுத்த ஆவி வந்து ஜீவனை அளிக்கும் பொறுப்பை சபையின் கையில் தந்திருக்கிறார். அது தான் கல்வாரியின் அர்த்தம்.
55இங்கு படுத்துக் கொண்டிருக்கும் வியாதிப்பட்ட ஸ்தரீயிடம், ''நான் விசுவாசமுள்ள ஜெபத்தை உனக்கு ஏறெடுப்பேன். நீ சுகமடையவாய்'' என்று சொல்வது எவ்வளவு பெரிய காரியம்! அதைத் தான் இயேசு அப்பொழுது செய்தார். ஆனால் அவர், ''இதைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள். ஒருவனை ஜீவனுக்கு எழுப்ப மாத்திரமல்ல, அவனுக்கு நித்திய ஜீவனை அளிக்க - அவன் நித்திய காலமாக ஜீவிக்க - உங்களுக்கு வல்லமையை அளிக்கப் போகிறேன்'' என்றார்.
தரித்திரரும், குருடரும், பரிதபிக்கப்படத்தக்க ஜனங்களே, அதை எப்படி நீங்கள் காணத் தவறுகின்றீர்கள்? அந்த பெரிய காரியத்தை உங்களால் காண முடியவில்லையா? ஜனங்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதே சம்பவிக்க கூடியவைகளில் மிகப் பெரிய காரியம்.
56நித்திய ஜீவன் என்பது என்ன? அவர் வாழ்ந்த வாழ்க்கை. அவருக்குள் இருந்த அந்த ஜீவனை மற்றவர்களுக்கு அளிக்கப்படுதல். ஒரு மனிதன் அதை செய்ய முடியுமா? ஒரு தேவ புத்திரன் அதை செய்ய முடியும். அவர், ''எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்'' என்றார். இங்குதான் கத்தோலிக்க சபையும் மற்ற அநேகரும் அந்த பெரிய தவறை செய்தனர். அவர்கள், ''உன் பாவங்களை நான் மன்னிக்கிறேன்'' என்றனர். அதுவல்ல அது.
வேதத்தில் அவர்களுடைய பாவங்கள் எப்படி மன்னிக்கப்பட்டன? பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு அந்த கேள்விக்கு பதிலளித்தான். அவர்கள், “இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? உனக்குள்ள எல்லாவற்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ள வழியென்ன?'' என்று கேட்டனர்.
அவன் மருந்து சீட்டை எழுதிகொடுத்தான். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவன் கூறினான். அவன், ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றான். எதற்காக? “பாவமன்னிப்புக்கென்று”. அதோ அந்த பெரிய கிரியை
57இன்று காலை எத்தனை போதகர்கள், இன்று காலை என்னை கேட்டுக் கொண்டிருக்கும் உங்களில் எத்தனை பேர், ஒலிநாடாவில் என் செய்தியைக் கேட்கும் உங்களில் எத்தனை பேர் கல்வாரிக்குச் சென்று, உங்களுக்காக தேவன் அங்கு என்ன செய்தார் என்று கண்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள்? அல்லேலூயா அது உங்கள் மடியில் இப்பொழுது உள்ளது. அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஏன்? மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்பட வேண்டியது.
கல்வாரி உங்களுக்கு என்ன அர்த்தத்தை அளிக்கிறது? அந்த நாள் உங்களுக்கு என்ன செய்தது? அது உங்களை ஏதோ வேத சாஸ்திரத்தினால் நிறைத்ததா? அல்லது உங்களை கிறிஸ்தவனாக மாற்றினதா? முழுவதும் அர்ப்பணித்தல் அல்லேலூயா! பாவங்கள் மன்னிக்கப்பட்டன. இயேசுவே, உமக்கு நன்றி. இதைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வீர்கள். தேவைகள் எங்கே என்று காண்கிறீர்கள், அல்லவா? இதைப் பார்க்கிலும் பெரிய கிரியைகள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பாவங்களை மன்னித்தல். ஆனால் உங்கள் கோட்பாடுகள், ஸ்தாபனங்கள் போன்றவை உங்களை ஓரிடத்தில் கட்டிப்போட்டு, நீங்கள் இன்னும் உலகத்துடன் சரசமாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
58கல்வாரிக்கு வந்த எந்த ஒரு மனிதனாவது ஸ்திரீயாவது யாரோ ஒருவர் கூறினார் என்பதற்காக தங்களைப் பெரியவர்களாக்கிக் கொள்ள முயல்வதை எனக்குக் காண்பியுங்கள்.... கல்வாரியை நேராக நோக்கின பிறகும் அப்படி செய்ய முயல்பவர்களை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். அது உண்மை ... கல்வாரியில் அந்த நாள்.
கல்வாரியில் உங்கள் நாளைக் கழித்துவிட்டு, நீங்கள் எப்படி கோட்பாடுகளினால் நிறைந்தவர்களாய் அங்கிருந்து வெளி வர முடியும்? நீங்கள் எப்படி ஒரு ஸ்தாபனத்தின் தலையாட்டி பொம்மையாக இருந்து, மனிதனால் உண்டாக்கப்பட்ட உபதேசத்தை போதிக்க முடியும்? அது ஏன் தேவனுடைய வார்த்தைக்கு உங்களைத் தாழ்த்துவதில்லை? நீங்கள் எப்பொழுதாவது கல்வாரிக்கு செல்வீர்களானால், நீங்கள் தாழ்மையுள்ளவர்களாய் வெளி வருவீர்கள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, தம்முடைய சரீரம் நொறுக்கப்படவும், முகத்தில் துப்பப்படவும் அனுமதித்து, அவருடைய உடைகளை அவர்கள் களைந்து அவரை நிர்வாணமாக்கி, உலகத்துக்கு முன்பாக அவரை சிலுவையிலறைந்து, அப்படிப்பட்ட ஒரு அவமானத்தை அவர் சகித்திருக்கும்போது, உங்கள் ஸ்தாபனத்தில் நீங்கள் பெருமைபடுத்தும் செயலை புரிந்து, பெரியவராக இருக்க எப்படி விரும்பலாம்? நீங்கள் கல்வாரிக்கு சென்று, அவர் இருந்ததை விட வித்தியாசமாக எப்படி வெளியே வர முடியும்? அவமானம், வெட்கம்.
''அவர்கள் என்னை உதைத்து வெளியே தள்ளிவிடுவார்கள்'' என்று நீங்கள் கூறலாம். அவர்கள் உதைத்து வெளியே தள்ளட்டும். கல்வாரியில் நாளைப் பெறுங்கள். அப்பொழுது தேவன் தமது வழியில் உங்களை நடத்துவார். அதை நான் மறுபடியும் கூற விரும்புகிறேன். கல்வாரியில் உங்கள் நாளைப் பெறுங்கள். அப்பொழுது தேவன் தமது வழியில் உங்களை நடத்துவார். நான் திரும்பவுமாக இதைக் கூறட்டும்: கல்வாரியில் உங்கள் நாளைக் கொண்டிருங்கள்; தேவன் உங்களை தம்முடைய வழியில் நடத்துவார். நாம் ஜெபம் செய்வோம்.
59கர்த்தாவே, ஓ, தேவனே, எங்கள் எல்லோரையும் இப்பொழுதே கல்வாரிக்கு கொண்டு செல்லும். எங்கள் சுயத்துக்கு நாங்கள் விலகட்டும், கர்த்தாவே- மனிதனுக்கு பயப்படுதல், மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயப்படுதல் போன்றவைகளுக்கு முழு உலகமே அவரைப் பார்த்து நகைத்து, அவரை பரியாசம் செய்தது. ஆனால் அவரோ மரண பரியந்தம் கீழ்படிந்தவரானார். அவர் அவமானத்துக்கு கீழ்படிந்தார். அவர் அரசாங்கத்துக்கும் கூட கீழ்ப்படிந்தார். ஆனால் சாத்தானோ இப்பூமியில் தள்ளப்பட்டபோது, இந்த பூமியின் மேல் அதிகாரம் வகித்து அதை அறிக்கை செய்து, “இந்த ராஜ்யங்கள் என்னுடையவைகள். அவைகளுக்குக்கு என் சித்தபடி செய்கிறேன்'' என்றான். அந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும், இந்த உலகம் சபிக்கப்பட்டு, சபிக்கப்பட்ட ஒருவனால் ஆளுகை செய்யப்படுகிறது என்பதை உணருகிறோம். ஆனால் தேவனே, ஓ தேவனே, சபிக்கப்படாத ஒரு ராஜ்யத்தை நாங்கள் சேவிக்கிறோம்.
பிதாவாகிய தேவனே, திரைப்பட உலகில் இன்று நீர் செய்துள்ளவை எவ்வளவு அற்புதமாயுள்ளது. பத்து கட்டளைகள் போன்ற திரைப்படங்களை நீர் வெளியிடும்படி செய்து, அது என்னவென்பதை ஆண்களும் பெண்களும் காணும்படி செய்தீர். தேவனுடைய வழி எப்பொழுதுமே உலகம் புறக்கணிக்கும் வழியாக அமைந்துள்ளது. ஏனெனில் ரஷியா கம்யூனிஸத்துக்குள் சென்றுள்ளது போல் நாங்களும்.... நாங்கள் இவ்வுலகத்தில் இருந்தாலும், இவ்வுலகத்தார் அல்ல. நாங்கள் கல்வாரிக்கு சென்றவர்கள். நாங்கள் அவருடையவர்களில் ஒருவராக இருக்கும் பொருட்டு, தேவனுடைய ராஜ்யத்துக்கென எங்களை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறோம். உலகம் என்னசொன்ன போதிலும், நிந்திக்கப்பட்ட கர்த்தருடைய சிலருடன் எங்கள் வழியை தெரிந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் உயிர்த்தெழுதலை அடைவோம்.
கர்த்தாவே, அது சமீபமாய் உள்ளது என்று விசுவாசிக்கிறோம். அப்பொழுது நாங்கள் உயிர்த்தெழுந்து, இவ்வுலகத்தில் நிறுவப்படும் அந்த ராஜ்யத்தில் பிரவேசிப்போம். தானியேல் அதை முன்கூட்டியே கண்டான். அது உலகத்தை பதரைப் போல் நொறுக்கினது. போரடிக்கும் களத்திலுள்ள பதர் பறந்து செல்வது போல், காற்று இதை அடித்து கொண்டு சென்றது. ஆனால் அதை நொறுக்கின கல்லோ வளர்ந்து பெரிய கன்மலையாகி பூமியை நிரப்பிற்று, அந்தக் கல் வரும். ஓ தேவனே, நாங்கள் அதனுடைய பாகமாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் எங்களை வெறுத்து, அனுதினமும் எங்கள் சிலுவையை சுமந்து, கிறிஸ்துவுக்காகவும் பிறருக்காகவும் வாழ அருள் புரிவீராக.
60இன்று காலை இங்குள்ள யாராகிலும் அவரை இரட்சகராக அறியாமலிருந்து, முடிக்கும் ஜெபத்தில் நினைவு கூறப்பட வேண்டுமென்றும், இது கல்வாரியில் உங்கள் நாளாகவும் இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் கரங்களையுயர்த்தி, 'சகோ. பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள். அவரை என் இரட்சகராக அறிந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சிறுவனே. வேறு யாராகிலும்?பின்னால் உள்ள என் சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராகிலும், ''அவரை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு களைப்புண்டாகிறது. நான் செய்ய வேண்டும் என்பதற்காக பிறந்த அந்த காரியத்துடன் விளையாடிக் கொண்டிருப்பதனால் என்ன பயன்? நான் தேவ குமாரனாக இருக்கப் பிறந்திருக்கிறேன். ஆனால் இங்கு நான் உலகத்தின் காரியங்களின் மீது பற்றுதல் கொண்டிருக்கிறேன். தேவனே, இன்று நான் சிலுவையில் அறையப்படட்டும் இன்று என்னையும் என் கருத்துக்களையும் சிலுவையில் அறைந்து, கிறிஸ்துவோடு பிழைத்திருந்து, பிறருக்காக வாழ்வேனாக. அவர்கள் எனக்கு என்ன செய்தபோதிலும், என்னை பரியாசம் செய்து, துன்புறுத்தி, பொல்லாங்கானவைகளை எனக்கு விரோதமாகக் கூறினாலும், அவர் செய்தது போல், நான் ஆட்டுக்குட்டியைப் போல் சாந்த குணமுள்ளவனாக, தாழ்மையோடு நடப்பேனாக. கடைசி நாளில் அவர் என்னை எழுப்புவதாக வாக்களித்துள்ளார். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்'' என்று கூற விரும்புகிறீர்களா?
இன்னும் வேறு கரங்கள் உயர்த்தப்பட உள்ளதா? பின்னால் உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக, உன்னையும். சரி, வேறு யாராகிலும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நாம் ஜெபிக்கும் முன்பு வேறு யாராகிலும்.
61எங்கள் பரலோகப் பிதாவே, பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு பிரசங்கித்தபோது, விசுவாசித்தவர்கள் சபையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இப்பொழுது கைகளையுயர்த்தினவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாக விசுவாசிக்கின்றனர். அவர்கள் முழு இருயத்தோடும் விசுவாசித்தார்களென்று நான் நம்புகிறேன். அப்படி அவர்கள் விசுவாசித்திருந்தால், தண்ணீர் குளம் இங்கு காத்திருக்கிறது. அவர்கள் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்பினால், அந்த நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க இங்கு யாராவது ஒருவர் இருப்பார். நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் அந்த ஒரு நாமமே கட்டளையிடப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு நான் வேதத்திலிருந்து எடுத்துரைத்தது போல் “மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் பிரசங்கிக்கப்பட்ட போது, அப்போஸ்தலன் அவர்களுக்கு வேதத்திலிருந்து எடுத்துக் கூறி, அவர்கள் முதலில் மனந்திரும்பி, அதன் பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றான். அது தான் போதகர் செய்யவேண்டிய வேலை. அவர்கள் மனந்திரும்ப வேண்டும், போதகர் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். ”எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்.''
62பிதாவே, உலகம் எப்படி இந்த போக்கில் போனது? அவர்கள் ஏன் எளிமையான சுவிசேஷத்தை விசுவாசிப்பதில்லை? அவர்கள் அதற்குப் பதிலாக தவறான பெயர்களையும், தவறான ஞானஸ்நானங்களையும், தவறான பரிசுத்த ஆவியின் அபிஷேகங்களையும் நுழைத்து, போதகர்களுடன் கைகுலுக்குவதும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப் பெயர்களையும் உபயோகிக்கின்றனர். அது வேதத்தில் இல்லாத ஒன்று. அது மனிதனால் உண்டாக்கப்பட்ட ரோம் உபதேசமேயன்றி, கிறிஸ்தவ போதகமல்ல. அது வேதத்தில் எங்கும் இல்லை. பாவங்கள் பட்டப் பெயர்களை உபயோகிப்பதனால் மன்னிக்கப்படாது. அது இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக மாத்திரமே.
பிதாவே, இது பிரபலமில்லாத ஒன்று. உமது வழிகள் எப்பொழுதும் அவ்வாறே இருந்த வந்துள்ளன. ஆனால் இன்று காலை ஆண்களும் பெண்களும் கல்வாரியில் அந்த நாளுக்கு வருவார்களாக. அந்த நாளில் இயேசு நிந்திக்கப்பட்டு, நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்டு, நொறுக்கப்பட்டு, முகத்தில் துப்பப்பட்டு, முழு உலகத்தாராலும், சபையாலும், அவரை நேசிக்க வேண்டிய ஜனங்களாலும் பரியாசம் செய்யப்பட்டார். ஆனால் இவை எல்லாவற்றிலும் அவர் வாயைத் திறக்காமல் பரியாசம் செய்தவர்களுக்காக மரித்தார்.
63தேவனே, இன்று காலை எங்களை கல்வாரிக்கு கொண்டு செல்லும். நாங்கள் பைத்தியக்காரர் என்றும், வேதத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்றும், வேறு என்ன வேண்டுமானாலும் அவர்கள் கூறட்டும். ஆனால் அவர்கள் தேவனுடைய சமூகத்தில் நின்று அது தவறென்று கூற முடியாது.
வேதாகமத்தின் மூலம் அவர்கள் தங்கள் பாவங்களை மூட முடியாது. வேதாகமம் அவர்களுடைய பாவங்களை, அவிசுவாசத்தை, பிரபலமாக வேண்டும் என்னும் எண்ணத்தை, மற்றவர்களைப் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வெளியரங்கமாக்குகிறது. அவர்கள் இன்று காலை கல்வாரிக்கு வந்து, மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்பட வேண்டியது என்பதை உணர்ந்து எருசலேமிலிருந்து தொடங்குவார்களாக. அவர்களும் சிலுவையிலறையப்படும் வழியை தெரிந்து கொண்டு, நொறுக்கப்பட்டு, துப்பப்பட்டு, பரியாசம் பண்ணப்பட்டு, மதத் துரோகிகள் வரிசையில் சேர்க்கப்பட்டு, என்னவெல்லாம் அழைக்கப்பட வேண்டுமோ, அதெல்லாம் அழைக்கப்படட்டும் -சபையை கிழித்தெறிகிறவன் போன்றவை.
கர்த்தாவே, இன்று காலை நாங்கள் நிந்திக்கப்பட்ட கர்த்தருடைய சிலருடன் எங்கள் வழியைத் தெரிந்து கொள்வோமாக. அப்போஸ்தலர் நடந்தது போல், நாங்களும் வலதுபுறம் இடதுபுறம் விலகாமல் நடந்து, எங்கள் இருதயங்களின் நன்மையினால் தேவனை சேவிப்போமாக. பிதாவே, இதை அருளும்.
ஜெப வரிசையில் வரவிருக்கும் வியாதியஸ்தரையும் ஊனமுற்றோரையும் சுகமாக்குவீராக. கைகளை உயர்த்தினவர்கள் இப்பொழுதே மனந்திரும்புவார்களாக. இவ்வளவு காலமாக தூர நின்றவர்கள் உடனடியாக தண்ணீரண்டைக்கு சென்று, செலுத்தப்பட்ட பலியாகிய தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவார்களாக. ஆமென்.